உங்களிடம் ஒரு நிமிடம்..
உலகமெல்லாம் படர்ந்து தமிழ் வாசம் வீசிக்கொண்டிருக்கும் என் தேசத்து உறவுகளே! வணக்கம் !
என் பள்ளிக் கல்வியின் இறுதி வகுப்பை முடித்து எம் தேசத்தை சுற்றிப்பார்க்க ஆனந்தமாய் 1982-ல் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீருக்கு நடைப்பயணம் மேற்கொண்டேன். அதுசமயம் எம் தேசமும் தேசத்து மக்களும் இருந்த நிலை கண்டு நெஞ்சம் பதறினேன்.
எம் இந்திய தேசத்தில் அகண்டுகிடக்கும் நிலப்பரப்பில் பொன்விளையும் மண்ணில் பூத்துக்குலுங்கிய கோடானுகோடி பாமரமக்கள் சாதி, மதம், இனம், மொழி, மாநிலம், அரசியல் பேதங்களால் சிதறுண்டுபோய், வறட்சி, வெள்ளம், வறுமை, அறியாமையினால் சிதைக்கப்பட்டு உண்ண உணவின்றி, உடுத்த உடையின்றி, உறங்க இடமின்றி சாலையோரங்களில் குப்பைகளாய் தேங்கிக் கிடப்பதை கண்டு கண்கலங்கி நின்றேன்.
வாழ்விற்கும் சாவிற்கும் இடையில் வாழவழித் தெரியாமல், சூதுவாது ஏதும் அறியாமல் வஞ்சிக்கப்பட்டு, வறுமைக்கோட்டிற்கு மேலும் கீழும் ஊசலாடிக் கொண்டிருக்கும் வறியவர் கூட்டம் தனைக்கண்டு என் பருவகாலக் கனவுகளை மறந்துபோனேன்.
உல்லாச உலகிற்கு உணவளிக்க தன் உதிரத்தை வியர்வையாய் உதிர்த்திடும் விவசாயிகள் இயற்கையினால் வஞ்சிக்கப்பட்டு, அரசுகளால் ஒதுக்கப்பட்டு, வறுமையினால் தழுவப்பட்டு, சொற்பக்கடனால் அவமதிக்கப்பட்டு, தன்மானத்திற்கு ஈடாக இன்னுயிரை மாய்துக்கொள்வதை கண்டு இரத்தக் கண்ணீர் வடித்தேன்.
என்ன வளம் இல்லை இந்த தேசத்தில்? எல்லாம் இருந்தும் ஏன் இந்த அவலநிலை?
வறுமை, வறட்சி, வெள்ளம் இவை மூன்றுக்கும் இந்திய மண்ணில் மையமாக இருப்பது தண்ணீர் மட்டுமே. இவற்றை ஒருமுகப்படுத்த நதிகள் இணைப்பே சரியான தீர்வு. நதிகளை இணைத்தாலே நாடு நலம்பெறும் என என் நடைப்பயணத்திலேயே முடிவெடுத்தேன்.
௦2.௦7.1982 அன்று இந்திய பிரதமர் இந்திராகாந்தி அவர்களை நேரில் சந்தித்து கங்கை காவிரி இணைப்பிற்கான எம் முதல் மணுவை அவரிடம் ஜி.கே. மூப்பனார் அவர்கள் முன்னிலையில் சமர்பித்தேன்.
கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் நான் மேற்கொண்ட நடைப்பயணத்தின் அனுபவங்களை குமுதம் வாரஇதழில் தொடராக எழுதினேன். அதனை தொகுத்து “நான் கண்ட இந்துஸ்தான்” என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டேன்.
பயணம் முடித்து ஊர் வந்து சேர்ந்தும் உறக்கம் கொள்ள மறுத்தது என் உள்ளம். நாட்டு நிலைகண்டு ஏற்பட்ட மன உளைச்சளால் என் வறுமையை துடைக்க சுமந்துவந்த அரசுப்பணியை தூக்கி எறிந்துவிட்டு “இந்திய நதிகள் இணைப்பு இயக்கம்” துவக்கி, என்னோடு துணை நின்ற நண்பர்களோடு களத்தில் குதித்தேன்,
நதிகள் இணைப்பிற்காக பலமுறை டில்லிக்கு படையெடுத்தேன். அவ்வமயம் நான் மேற்கொண்ட வித்தியாசமான ஆறு பயணங்களின் மாறுபட்ட அனுபவங்களை தங்களுடன் பகிர்ந்துக் கொள்ள “நாடோடிப் பயணங்கள்” என்ற நூலை எழுதி முடித்தேன்.
இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி தேசம் முழுவதும் 25,௦௦௦ கிலோமீட்டர் தூரம் ஸ்கூட்டரில் பயணித்து வந்து அதன் அனுபவங்களை “பாரத யாத்திரை” என்ற பெயரில் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.
உங்கள் ஆதரவுக்கரம் நீட்டுவீர்கள் என்ற நம்பிக்கையில் மேலும் என் பயணங்கள் தொடரும்...!
வாருங்கள் ஒன்றுபட்டு போராடுவோம்! நதிகள் இணைப்பின் மூலம் தேசிய நீர்வழிசாலை அமைப்போம்! வலிமைமிகு வல்லரசாய் நம் தேசத்தை உருவாக்குவோம்!
நன்றி! வணக்கம்.
எம் தேசத்திற்காக என்றும் உங்களுடன் –
தேசிய நடை தீரர் - ஜி.ஏ. ஷேக் சர்தார்
ஷேக் சர்தார் முழுவிவரம்
பிறப்பு | மார்ச் 11, 1961 ஐகுந்தம் புதூர், கிருஷ்ணகிரி மாவட்டம், தமிழ் நாடு , இந்தியா |
இருப்பிடம் | பருகூர் |
இனம் | தமிழர் |
தேசியம் | இந்தியர், |
மற்ற பெயர்கள் | ஜி.ஏ.ஷேக்சர்தார், ஐ.ஏ.எஸ்.சர்தார் |
பணி | சமூக சேவகர் |
அறியப்படுவது | தேசிய நடையாளர், நதிகள் இணைப்பு போராளி |
இயக்கம் | இந்திய நதிகள் இணைப்பு இயக்கம் |
சாதனை | கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை நடைப் பயணம் மேற்கொண்ட முதல் தமிழர் |
பெற்றோர் | ஆர்.கே.ஷேக் அமீர், கமுருன் நிஷா |
ஷேக் சர்தார்:
இவர் ஐ.ஏ.எஸ்.சர்தார் என்ற பெயராலும் அறியப்படுகிறார். கவிஞர், எழுத்தாளர், நாடக இயக்குனர், சமூக சேவகர், நதிகள் இணைப்பு போராளி என பன்முகம் கொண்டவர். மனிதநேயம், மத நல்லிணக்கம், தேசபக்தி மிக்கவர். தேசத்திற்காக தன் வாழ்கையை அர்பணித்துக் கொண்டவர். இவர் எழுதிய “நான் கண்ட இந்துஸ்தான்” என்ற நூல் தமிழக அரசால் மாவட்ட நூலகங்களுக்காக பெறப்பட்டது. பூமிதான இயக்க தந்தை வினோபாஜியால் நேரில் ஆசீர்வதிக்கப்பட்டவர். தன்னுடைய தாய்நாட்டை நினைந்து பெருமைகொண்டவர். தன் தாயகத்தின் எதிர்கால சிந்தனையும், உலக அமைதிக்கான என்னமும் மிக்கவர். “வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம்” என்ற பாரதியின் கனவை இலட்சியமாகக் கொண்டவர்.